ஏன் எனது நிரல்களுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கிறேன்?

ஏன் எனது நிரல்களுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கிறேன்?

Published by Arun Isaac on

In other languages: English

Tags: தமிழ், அரசியல், இந்தியா, மென்பொருள், குடியேற்றவாதம்

எனது நிரல்களுக்கு நான் தமிழ்ப் பெயர்களை வைப்பதுண்டு. ஏன் எல்லோரையும் போல் ஆங்கில பெயர்களையே வைத்தால் என்ன?

குறிப்பு: இப்பதிவு வெள்ளையருக்கென ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கப்பட்டது. தமிழரோ இந்தியரோ படித்தால் சிலக் கருத்துகள் வேறு மாதிரி குழப்பமாகப் போய்ச் சேரலாம்.

நான் புதியதோர் மென்பொருள் நிரலை உருவாக்கும் போது, என் தாய்மொழியாம் தமிழில் பெயர் வைப்பதுண்டு. தமிழ் மக்களின் கதைகளிலும் பழமையான சங்க இலக்கியங்களிலும் தற்காலத்து திரையுலகிலும் பெயரைத் தேடுவதுண்டு. மென்பொருள் உலகில் இதுப் பெரும்பாவம். ஒரு மென்பொருள் நிரல் பெயரும் புகழும் அடைய எல்லோர்க்கும் புரிகிற ஆங்கில மொழியிலேயே பெயர் வைக்க வேண்டுமென்பது எழுதப்படா விதி. இதைத் தெரிந்தும் ஏன் தமிழில் பெயர் வைக்கிறேன்?

இதைப் புரிந்துக் கொள்ள, தற்காலத்துத் தமிழ் அரசியலை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நான் 200 ஆண்டு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து அண்மையிலேயே மீண்டு வந்த புதியதோர் நாட்டிலே பிறந்து வளர்ந்து வந்தேன். நான் வளர்ந்து வந்த சமுதாயம் ஆங்கிலத்தையே அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியின் மொழியாகத் தூக்கி வைத்துக் கொண்டாடியது. தமிழ் பாட்டாளியின் கீழ்த்தனமான மொழியென ஒடுக்கப்பட்டது. பள்ளியில் தமிழ் பேசினால் ஆசிரியரின் பிரம்பு வந்துக் கொஞ்சும், அல்லது பிற மாணவர்கள் முன் திட்டிக் கேவலப்படுத்துவர். சிலப் பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் கூட விதிக்கப்படும். நண்பர்களும் உன் துன்பத்தில் இன்பம் காணத் தமிழில் பேசினால் மனசாட்சியேயின்றி ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பர். ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தெரியாத பலர் அமைதியிலேயே பள்ளிப் பருவத்தைக் கடந்தனர். நான் இக்கருத்தையெல்லாம் நன்குக் கற்று அகங்கொண்டேன். முன்னேற்ற வெறி கொண்ட என் நடுத்தட்டு பெற்றோர் ஊக்குவிக்க ஊக்குவிக்க சிறு வயதிலேயே ஆங்கிலம் நன்குக் கற்றேன், எண்ணற்ற ஆங்கில நூல்களைப் படித்தேன். தமிழ் நூல்களைப் படிக்கவேயில்லை, தமிழையே அருவருப்பாகப் பார்த்தேன். என் அன்றாட தமிழ்ப் புலமையும் சற்று மந்தமாகவே இருந்தது. என் தமிழ் அடையாளத்தில் தாழ்வுணர்ச்சி கொண்டேன். அதை மறக்க ஆங்கிலத்தில் இன்னும் பெரும் ஆர்வம் காட்டினேன். அத்தாழ்வுணர்ச்சி இன்னும் என்னுடன் தான் இருக்கிறது. இத்தனை ஆண்டு அதை ஒழிக்க முயன்றும் என் தமிழ் நிரல் பெயர்களைப் பிறரிடம் சொல்லும் போது திக்கி முக்கி சொற்களைத் தொண்டைக்குள் முழுங்கித் தான் சொல்கிறேன். எனக்கு மட்டுமல்ல, தமிழர் அனைவருக்கும் இத்தாழ்வுணர்ச்சி இருக்கிறது. அதனால் தான் குறையொன்றுமேயில்லா அழகிய செந்தமிழ்ச் சொற்களைக் கூட விட்டு விட்டு ஆங்கில கடன்சொற்களுக்குச் செல்கின்றனர், ஆங்கிலம் அரைகுறையாக பேசுபவரைக் கேலி செய்கின்றனர். இதற்கு ஒரு முடிவு காண வேண்டும். இத்தாழ்வுணர்ச்சியை என் மனத்திலிருந்து ஒழிக்க வேண்டும், தமிழ் மக்கள் மனத்திலிருந்தும் ஒழிக்க வேண்டும். உலகும் நம் கதையை அறிய வேண்டும். ஆமாம், அதனால் தான் என் நிரல்களுக்குத் தமிழ் பெயர் வைக்கிறேன். தன் படைப்புகளுக்குத் தமிழரே தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால் வேறு யார் வைப்பார்?

தமிழ்ப் பெயர் வைத்து IKEA காட்சியரங்கில் பொருட்கள் பெயரொன்றும் மனத்தில் நிலைக்காதது போன்ற உணர்ச்சியை உருவாக்கியதற்கு1 மன்னிக்கவும். ஆங்கிலேயருக்கு: குடியேற்றவாதத்தை வேரோடு பிடுங்க ஆங்கிலத்தின் தாக்கத்தையும் குறைத்து தான் ஆக வேண்டும். அனைத்துலகுமே உங்கள் மொழியைப் பேசும்பொழுது, பிறரின் உணர்வுகளை, அதுவும் மஞ்சள் விழியும் அடர்நிறம்2 படைத்தவரின் உணர்வுகளைப் புரிந்து ஏற்பது உங்களுக்கு எளிதல்ல. எனினும், முயல்க.

Footnotes:

1

சுவீடன் மக்களும் மன்னிக்கவேண்டும்: உங்கள் பெயர்கள் உங்கள் மனத்தில் நிற்குமென்பதை அறிவேன்.

2

Burmese Days யில் திராவிட வேலைக்காரனை வருணிப்பது: "The butler, a dark, stout Dravidian with liquid, yellow-irised eyes like those of a dog, brought the brandy on a brass tray."