Guile உடன் இலண்டனில் வீடுத் தேடல்

Guile உடன் இலண்டனில் வீடுத் தேடல்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: இலண்டன், lisp, scheme, மென்பொருள்

இலண்டனில் வாடகைக்குச் சரியான வீட்டைக் கண்டறிய ஒரு Guile உரைநிரல். Guile நடைமுறைக்கு ஒவ்வாத மொழி என்றுச் சொன்னதெவர்!

பிக் பென் மணிக்கூடு அருகே lambda என்னும் கிரேக்க எழுத்தும் GNU Guile சின்னமும்

Figure 1: பிக் பென் மணிக்கூடுடன் GNU Guile

அண்மையில் வேலைக்காக இலண்டன் வந்தேன். இலண்டனில் நெடுநாள் வாழ வேண்டியிருப்பதால் நல்லதோர் வீடு வேண்டுமென்றெண்ணினேன். ஆனால் இலண்டனில் வீடு தேடல் எளிதன்று. என்னால் கொடுக்க இயன்ற வாடகைக்குச் சில வீடுகளே இருந்தன. அவற்றைக் கண்டறிந்துப் பார்த்து முடிவெடுப்பதற்குள் இன்னொருவர் அதைக் கவ்விச் செல்கிறார். மேலும், நான் வீடு விளம்பரங்களைத் தேடும் OpenRent வலைத்தளத்தில் என் தேவைகளைச் சரியாகக் குறிப்பிட வசதியில்லை. அதனால் OpenRent தரவை இறக்கி என் கணினியிலேயே பகுத்தாய Guile உரைநிரலொன்றை எழுதினேன். முதலில் OpenRent குறைகள் பற்றிக் காண்போம்.

OpenRent குறைகள்

வாடகையில் பிறக் கட்டணங்கள் சேரா வீடு

நான் மின், நீர், வளி, ஊர்மன்ற வரி (council tax) போன்ற கட்டணங்கள் வாடகையில் சேரா வீட்டையே விரும்பினேன். அக்கட்டணங்கள் வாடகையில் சேர்ந்த வீடுகளை மட்டும் காட்ட OpenRent தளத்தில் வசதியுள்ளது. ஆனால் அக்கட்டணங்கள் வாடகையில் சேரா வீடுகளை மட்டும் காட்ட வசதியில்லை.

சாலை வழித் தொலைவும் நேர்க்கோட்டுத் தொலைவும்

OpenRent தளத்தில் ஒரு மையப்புள்ளியிலிருந்து குறிப்பிட்ட சுற்றளவிலுள்ள வீடுகளை மட்டும் பட்டியலிடலாம். ஆனால் இது நேர்க்கோட்டளவிலுள்ள தொலைவையே பயன்படுத்துவது. நேர்க்கோட்டுத் தொலைவு சரியானதன்று. நாம் பறவையெனின் சேரிடம் நோக்கி நேராக பறந்துச் செல்லலாம். ஆனால் நாம் தரையிலே நடந்துச் செல்லும் உயிர்களாவதால் சாலை வழியே சுற்றிச் சுற்றித் தான் செல்ல இயலும். நேர்க்கோட்டளவில் வீடு எவ்வளவு தொலைவில் இருக்கிறதென்பது பற்றி நமக்குக் கவலையில்லை. நேர்க்கோட்டளவில் தொலைவாக இருப்பினும் சரியான தொடருந்து பாதை அருகே இருந்தால் சென்று வருவது எளிதே.

புதிய விளம்பரங்களே வேண்டும்

மிக அண்மையில் வெளிவந்த புதிய வீட்டு விளம்பரங்களை நாடுவதே நன்று. பழைய விளம்பரங்கள் அநேகமாக யாராவது ஏற்கனவே அணுகி பேச்சுவார்த்தையில் இருப்பார்; அவை கிடைப்பதரிது. விளம்பரங்களின் புதுமை கொண்டு வரிசைப்படுத்த OpenRent தளத்தில் வசதியில்லை.

குடியிருப்போர் எண்ணிக்கை

சிறு வீடுகள் பல ஒருவரை மட்டுமே குடியிருக்க அனுமதியளிக்கின்றனர். எனக்கு என் மனைவியுடன் தங்க இருவரையாவது அனுமதிக்கும் வீடு தேவைப்பட்டது. குடியிருப்போர் எண்ணிக்கை வைத்து வீடுகளைக் காண OpenRent தளத்தில் வசதியில்லை.

Bedsit தவிர்

பல வீடுகள் Bedsit வகையைச் சார்ந்தவை. அத்தகைய வீடுகளில் சரியான அடுக்களை இருப்பதில்லை. அவற்றைக் காட்டாமைக்கு OpenRent தளத்தில் வசதியில்லை.

குறைகளை நிறையாக்கும் Guile உரைநிரல்

இக்குறைகளை நிறையாக்கும் வகையில் OpenRent தரவை எனது கணினிக்கே இறக்கி என் விருப்பம் போல் பகுத்தாயலாம் என நினைத்தேன். இதைச் செய்ய OpenRent எளிதான API எதுவும் வழங்கவில்லை. அதனால் OpenRent வலைப்பக்கங்களின்று தேவையான தரவை நானே சுரண்ட வேண்டியிருந்தது. இதற்கு guile-json மற்றும் guile-lib (htmlprag) HTML கூறாக்கியும் மிகவும் பயன்பட்டன. வீட்டிலிருந்து வேலைக்கு மிதிவண்டியிலேயே சென்றால் எவ்வளவு தொலைவென்றறிய OpenStreetMap தரவைப் பயன்படுத்தும் Open Source Routing Machine (OSRM) API யை அணுகினேன். வீட்டருகேயுள்ள தொடருந்து நிலையங்கள் வழியாக எந்தெந்த தொடருந்துப் பாதைகள் செல்கின்றன என்றறிய Transport for London (TfL) API யை அணுகினேன். இவற்றையெல்லாம் அடிக்கடி அணுகி தொல்லை செய்ய வேண்டாமென அவற்றின் மறுமொழிகளைப் பதுக்ககமைத்துப் பதுக்கினேன்.

எனது Guile உரைநிரல் https://git.systemreboot.net/rent-in-london/ git களஞ்சியத்தில் வாழ்கின்றது. அது உங்களுக்கும் பயன்பட்டால் மகிழ்ச்சி. அவ்வுரைநிரலை இயக்கினால் அதுக் கீழ்க்காணும்வாரு விடையளிக்கும். நான் அறிய விரும்பும் வீட்டுப் பண்புகளை மட்டும் அழகாகத் தொகுத்துக் காட்டுகிறது. அதுமட்டுமன்றி என் தேவைகளுக்குப் பொருந்தும் வீடொன்று புதிதாக விளம்பரப்படுத்தப்பட்டால் மிக எளிதாக உடனே கண்டறியவும் பயன்பட்டது.

1 Bed Flat, Lyonsdown Rd, EN5 (posted 58 hours ago)
https://www.openrent.co.uk/1566437
£1350 pcm
Cycling distance: 16.4 km
Tube: High Barnet (northern), Totteridge & Whetstone (northern)

1 Bed Flat, Page Green Terrace, N15 (posted 56 hours ago)
https://www.openrent.co.uk/1571987
£1400 pcm
Cycling distance: 9.1 km
Tube: Seven Sisters (victoria)

1 Bed Flat, Neasden Lane, NW10 (posted 56 hours ago)
https://www.openrent.co.uk/1571965
£1280 pcm
Cycling distance: 13.2 km
Tube: Neasden (jubilee), Dollis Hill (jubilee), Wembley Park (jubilee metropolitan)

1 Bed Maisonette, Albert Road, E18 (posted 6 hours ago)
https://www.openrent.co.uk/1573365
£1200 pcm
Cycling distance: 17.0 km
Tube: South Woodford (central), Snaresbrook (central), Redbridge (central), Wanstead (central)

பதிப்புரிமை

பிக் பென் தலைப்புப் படம் CC BY-SA 3.0 உரிமத்தின் கீழ் வெளியடப்படுகிறது. அது பின்வரும் படங்களின்று உருவாக்கப்பட்டது.