வெளியே இருக்கும்போது நீரில்லாமல் மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பது

வெளியே இருக்கும்போது நீரில்லாமல் மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பது

Published by Arun Isaac on

In other languages: English

Tags: மிதிவண்டி

வெளியே இருக்கும்போது மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பதற்கு நீர் கிட்டாது. அப்போது காற்றுப்பையை மணல் மேல் வைத்துக் காற்று வெளியேறும் இடத்திலிருந்து தூசி பறப்பதை வைத்துத் துளையைக் கண்டுபிடிக்கலாம்.

வீட்டில் இருக்கும்போது மிதிவண்டி காற்றுப்பையை நீரில் ஆழ்த்தித் துளையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் வெளியே சாலையில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது துளை விழுந்தால் அதைக் கண்டுபிடிப்பதற்கு நீர் கிட்டாது. சிறிய துளைகளை நீரில்லாமல் கண்டுபிடிப்பது கடினம். அதுவும் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் சத்தம் அதிகமாக இருப்பதால் செவியும் பயனாகாது. அது போன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது? எப்படி துளையைக் கண்டுபிடிப்பது? ஒன்றரை வாரங்களுக்கு முன் சோஹோமுடன் ஹெசரகட்டாவிற்குச் சென்றிருந்தபோது இதற்கு ஒரு வித்தையைத் தற்செயலாகக் கண்டறிந்தோம்.

காற்றுப்பையை மணல் மேல் வைத்துக் காற்றேற்றினால் காற்று வெளியேறும் துளையின் பக்கம் தூசி பறக்கும். இதை வைத்துத் துளையை எளிமையாகக் கண்டுபிடித்துவிடலாம். துளை காற்றுப்பையின் மேல் பக்கத்தில் இருந்தால் அதைத் திருப்பிப் போட்டுப் பார்க்கவும். பின் உப்புத்தாள் கொண்டு நன்றாக துடைத்துவிட்டு துளைக்கு ஒட்டுப்போடவும். இல்லாவிட்டால் ஒட்டின் பசை சரியாகப் பிடிக்காது. மேலும் காற்றுப்பையை வட்டகைக்குள் உள்ளிடுவதற்குமுன் மணலையும் தூசியையும் நன்றாக அகற்றவும். தூசியோடோ மணலோடோ காற்றுப்பையை வட்டகைக்குள் வைத்துப் பொருத்தினால் அதனால் உராய்ந்து மறுபடியும் துளை விழலாம்.