நெதர்லாந்து பயணம்

நெதர்லாந்து பயணம்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: பயணம், ஆம்சடர்டாம், ஐரோப்பா

சென்ற நவம்பர் NL-RSE 2019 மாநாட்டிற்காக ஆம்சடர்டாம் சென்றிருந்தேன். இது தான் நான் முதன்முறையாக ஐரோப்பாவிற்குச் சென்றது. ஐரோப்பிய கட்டற்ற மென்பொருள் நண்பர்களைச் சந்திக்க இயன்றது. ஐரோப்பாவின் உயரிய நிலை கண்டு வியந்தேன். இது ஒரு பயணக்கதை.

சென்ற நவம்பர் NL-RSE 2019 மாநாட்டிற்காக ஆம்சடர்டாம் சென்றிருந்தேன். அங்கு நெடுநாள் GNU Guix திட்டத்தில் என்னுடன் பணியாற்றிய பீயரையும் எல்லாவையும் சந்தித்தேன். இதற்கு முன் அவர்களிடம் Guix மடலாற்குழுவில் Guix வேலை பற்றி மட்டுமே பேசியுள்ளேன். இதுவரை எனது மின்னஞ்சல் நிரலில் ஒரு பெயராக மட்டும் இருந்தவரை முழு மனிதராகப் பார்க்கவும் அறியவும் முடிந்தது. பீயரை முதலில் ஆம்சடர்டாமில் தனியாகவும் பின்னர் எல்லாவுடன் ஹாகிலும் சந்தித்தேன். ஹாகில் குளம்பியும் (coffee) மதுவும் அருந்தினோம். பின்னர் பேசியது போதாது பிரிய மனமில்லாது எல்லா வீட்டுக்கும் சென்றோம். அங்கு உணவு உண்டு மேலும் சில நேரம் பேசிய பின் நான் ஆம்சடர்டாம் திரும்பினேன்.

பீயரும் நானும் எல்லாவும் (இடதிலிருந்து வலது வரை) அருந்தகத்தில்; சுற்றுப்புறம் மஞ்சள் நிற விளக்கொளியால் சூழ்ந்திருக்கிறது

Figure 1: பீயரும் நானும் எல்லாவும் (இடதிலிருந்து வலுது வரை) ஹாகில் ஒரு அருந்தகத்தில்

பொதுப் போக்குவரத்து

ஆம்சடர்டாம் மிதிவண்டிக்குப் பெயர் பெற்ற ஊர். தனியார் தானுந்துகள் மிகக் குறைவு. பெரும்பாலார் மிதிவண்டியிலேயே சுற்றுவர். இதுத் தனி மனிதரின் அக ஒளியால் மட்டும் அமைந்ததல்ல; கிடைத்த வாய்ப்பிலெல்லாம் தானுந்துகளுக்கு எதிராக ஊரை அமைத்ததினால் நிகழ்ந்தது. சாலைகளில் பெரும்பான்மையான இடம் நடைபாதைக்கே, பிறகு தண்டூர்திப் பாட்டைகள் (tram lines),1 பின்னர் மீதம் இடமிருந்தால் தான் தனியார் தானுந்துகளுக்கு வழி அமைக்கப்பட்டிருக்கும். எல்லாப் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்களிலும், பெரிய உள்ளூர் தொடருந்து நிறுத்தமாக இருக்கட்டும் சின்னஞ்சிறு தண்டூர்தி நிறுத்தமாக இருக்கட்டும், ஒரு பொதுப் போக்குவரத்து வலைப்பின்னல் வரைபடமும் ஒரு மின்த்திரையும் இருக்கும். திரையில் அந்த நிறுத்தத்தில் அடுத்து என்ன வண்டி வரும் எவ்வளவு நேரத்தில் வரும் என்னும் தகவல் தோன்றும். 2 நிமிடங்களில் வண்டியொன்று வருமெனத் திரையில் இருந்தால் சரியாக 2 நிமிடங்களில் வரும்! நம் நாட்டில் தகவல் பலகைகள் எப்போதுமே பழுதாகிக் கிடக்கும்; வேலை செய்தாலும் அரைகுறையாகத் தான் வேலை செய்யும். அதனால் அதிலிருக்கும் தகவலை முற்றிலும் நம்பாமல் ஒரு ஐயத்தோடு தான் பார்ப்போம். எதற்கும் பிற மக்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வோம். அதேப் பழக்கத்தில் முதலில் ஆம்சடர்டாமிலும் தகவல் பலகைகளை ஐயத்தோடு தான் பார்த்தேன். ஆனால் அவை எப்போதுமே சரியானத் தகவல் அளிப்பதைக் கண்டு வியந்தேன். இத்திரைகள் தேவையற்ற சொகுசெனத் தோன்றலாம். ஆனால் வண்டி வருமா வராதா எப்போது வரும் என்ற மனக்கலக்கத்தை அகற்றி பொதுப் போக்குவரத்தை நிம்மதியாக பயன்படுத்த இவை உதவுகின்றன.

முன்புலத்தில் நூற்றுக்கணக்கான் மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடம், பின்புலத்தில் ஆம்சடர்டாம் பட்டணத்து கட்டடவெளி

Figure 2: ஆம்சடர்டாமில் மிதிவண்டி நிறுத்துமிடம்

நம்மூர் பேருந்துகளில் பெண்களுக்கெனத் தனி இருக்கைகள் இருக்கும். மேலும் பெண்கள் அருகில் ஆண்கள் அமர்தலாகாது என்னும் வழக்கம் இருக்கிறது. ஆம்சடர்டாமில் அவ்வாறு இல்லை. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். முதலில் பெண்கள் அருகில் அமர்வது ஏதோ குற்றம் புரிவது போலிருந்தது. ஆனால் போகப் போக எளிதாயிற்று. ஒருவர் ஆணாப் பெண்ணா என்பதைக் கவனிக்காமலே போய்விட்டேன். ஒருவரை அவர் பால் கொண்டு வகைப்படுத்தாமல் அவரை மனிதராகப் பார்ப்பது மிகப் புத்துணர்வளித்தது.

நம்மூரில் பேருந்துகள் மிகக் கூட்டமாக இருக்கும். சாலை நெறிசலில் எப்போது போய் சேருமோ என்னும் ஐயமிருக்கும். அதனால் நாம் நின்றுக்கொண்டிருக்கும் போது யாராவது இறங்கினாரெனின் அவர் இருக்கையை பிறர் பிடிக்கும் முன் வெட்கமேயில்லாது ஓடிப் பிடிக்கும் இயல்பு நமக்குண்டு. ஆம்சடர்டாமில் சொன்ன நேரத்திற்குப் போய் சேர்ந்துவிடுவோம் என்னும் உறுதியிருப்பதால் அங்கு அவர் யாரும் இருக்கைகளை ஓடிப் பிடிப்பதில்லை. பொறுமையாக சென்றமர்வர். பல நேரம் இருக்கையிருந்தும் சிறிது நேரம் தானென அமராமலே நிற்பர். சாலை நெறிசலால் பாதிக்கப்படாததால் நம் நாட்டு உள்ளூர் தொடருந்துகளிலும் இப்பொறுமையை ஓரளவு காணலாம்.

நம்மூர் பேருந்துகள் மிக நெருக்கடியாக ஆள் நிற்பதற்குக் கூட இடமின்றி இருக்கும். சொல்லவே தேவையில்லை, நெதர்லாந்தில் அவ்வாறில்லை. தண்டூர்தி நிறுத்தங்களும் பற்பல அருகருகே இருந்தன. பெங்களூரிலோ பேருந்து மாற வேண்டிய இடத்திலெல்லாம் கிட்டத்தட்ட 1 கி.மீ. நடக்க விட்டுவிடுவார் — எப்பாளா, மேக்ரி வட்டம், உங்களைப் பற்றி தான் பேசுகிறேன்! நம்மூரில் போதிய பேருந்து நிறுத்தங்களை அமைத்து போதிய பேருந்துகள் விட்டால் நம்மரசு குறைந்து விடும் போல. மக்களை மக்களாக மதிக்காதது தான் காரணம்.

அளவிற்கு மிகையாய் ஏற்றப்பட்ட சென்னை நகரப் பேருந்தொன்று; சிலர் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர்

Figure 3: அளவிற்கு மிகையாய் ஏற்றப்பட்ட சென்னை நகரப் பேருந்தொன்று

பண்பாடு

இன்மொழியும் பிறரை மதித்தலும்

நெதர்லாந்தர், பொதுவாக மேற்கத்திய மக்கள் எவரும், "Hello! Good morning!" என இன்மொழியின்றி எந்த உரையாடலையும் துவங்கமாட்டார் போல.2 அதேப் போன்று பிரியும் பொழுது "Nice to meet you, Have a nice day" என்று மேலும் இன்மொழிகளோடு தான் பிரிவர். நாம் கடையில் பொருள் வாங்குகிறோமென்றால் எந்த முகவுரையுமின்றி "ஒரு தோசை, ஒரு வடை" என நேராகக் கேட்டுவிடுவோம். நம் மக்களுக்கு இன்னொருவர் சொல்வதைக் கேட்பதற்குப் பொறுமை கிடையாது. என் நேரத்தை வீணடிக்காமல் உனக்கென்ன வேண்டுமென்று சீக்கிரம் சொல் என விறைப்பாக இருப்பர். மேற்கத்திய நாடுகளிலோ இன்மொழியின்றி சட்டென வேலைக்கு வந்தால் காட்டுமிராண்டியென முகஞ்சுளிப்பர்.

சாதிப் பித்து உதிரத்தில் ஊறிய நம் நாட்டில் வீட்டு வேலைக்காரர் உட்படப் பலக் குற்றேவல் புரிபவரை நாம் மனிதராகவே கருதுவதில்லை. அவரும் அச்சூழலிலேயே பிறந்து வளர்ந்து வருவதால் பெரிதாக மரியாதை எதிர்ப்பார்ப்பதில்லை; அவருக்குள்ளே தாம் தாழ்ந்தவரென்னும் தாழ்வு மனப்பான்மை இருக்கும் — பலர் கண்ணுக்குக் கண் பார்க்கக் கூட மாட்டார். ஆனால் நெதர்லாந்தில் அவ்வாறில்லை. எல்லா மனிதரைப் போல் அவரும் தன்மானமுடையவர். யாரும் அவரைத் தாழ்ந்தவரெனக் கருதுவதில்லை, அவரும் தம்மைத் தாழ்ந்தவரெனக் கருதுவதில்லை. நான் நேர்ந்த குற்றேவல் வேலைக்காரரிடம் "Hello, Have a nice day" என்றெல்லாம் இன்மொழி பகிர்ந்து தான் வந்தேன்.3 சமத்துவம் ஒடுக்கப்பட்டவருக்கு மட்டுமின்றி அவரை முன்பு ஒடுக்கியவர்க்கும் தான் இன்சூழலை அமைக்கிறது. இதை நாம் புரிந்தாற்றின் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சாதி ஏற்றத்தாழ்வுகளுக்குள்ளேயே நம் முழு வாழ்க்கையை நாம் வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நீரைக் காணாத மீன் போல, நம் சின்னஞ்சிறு செயல்களில் நாளும் அவ்வேற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன என்பது நம் சிந்தைக்கு எட்டுவதில்லை. ஆனால் ஐரோப்பாவில் சாதியில்லாச் சமுதாயத்தில் வாழும்போதுதான் புரிகிறது சாதி எவ்வளவுக் கொடியதென்றும் அதுவில்லாச் சமுதாயம் எவ்வளவு உயர்ந்ததென்றும்.4 நெதர்லாந்தில் தரை இறங்கிய போது திடீரென்று அத்தனை வெள்ளைக்காரரிடையில் ஒரே ஒரு பழுப்பு நிறத்தவனாக பதற்றமடைந்தேன். ஆனால் அம்மக்களின் பொறுமையையும் சமத்துவத்தையும் காணக் காண ஓரமைதி எனக்குள்ளே புகுந்தது. அத்தகைய அமைதியை இந்தியாவிலும் நான் கொண்டதில்லை.

துடைதாள்

நெதர்லாந்தின் புகழை மட்டும் விடாதுப் பாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் ஒரு விதத்தில் எப்போது தான் வீடுத் திரும்புவோமோ என எனக்கிருந்ததென்றால் அது கழிவறை துடைதாளினால் தான். நீரில் கால் கழுவாமல் தாள் கொண்டு துடைப்பது போன்ற கொடுமை எதுவுமில்லை. எல்லா விதத்திலும் முன்னேற்றமடைந்த மேற்கத்தியவருக்கு இந்த அடிப்படையானது தெரியவில்லையே!

கடைகளில் காசு

அத்தனை வகையிலும் மனம் குளிர இனிமையாக நடந்த மக்கள் ஒரு வகையில் என் மனம் புண்பட நடந்தனர். கடையில் ஏதாவது பொருள் கேட்டால் "3 euros please", "4 euros please" என மலர்ந்த முகத்துடன் அதன் விலையைக் கூறிப் பார்த்துக்கொண்டே இருப்பர். கேட்ட பொருளை எடுக்கவோ கட்டணச்சீட்டை எழுதவோ தொடங்கார். கையில் காசு வாயில் தோசை எனக் காசு அவர் கைக்கு வரும் வரை காத்துக்கொண்டே இருப்பர். காசு நான் தருவேன் என என் மீது நம்பிக்கைக் கூட இல்லையா என என் மனம் புண்பட்டது.5

மொழி

நெதர்லாந்தில் இடச்சும் ஆங்கிலமும் பேசப்படுகின்றன. நெதர்லாந்தர் அவர்களிடையே இடச்சு மொழி பேசுவர். வெளிநாட்டவரிடம் ஆங்கிலம் பேசுவர். ஆனால் ஆங்கிலம் இன்னொருத் தாய்மொழியையும் கொன்றுவிட்டது, உலகெங்கும் ஆங்கிலம் மட்டுமே பேசலாமென மருள் நோக்கோடுக் கொள்ளற்க. நெதர்லாந்தர் நம்மைப் போல் அல்லர். அவர்கள் பிற நாட்டவரிடம் உறவாட ஆங்கிலம் கற்றுக்கொண்டுள்ளதால் அவர் தம் தாய்மொழியை மறக்கவில்லை. ஒரு சில இடங்களில் தவற ஊரெங்கும் தகவல் பலகைகளும் அறிவிப்புகளும் இடச்சில் மட்டுமே இருக்கும். அவர் கல்வியையும் தமது தாய்மொழியிலேயே கற்கின்றனர். அதே நேரம் அவர் இடச்சு வழி கற்பதால் அவரது ஆங்கில அறிவு அரைகுறையானதெனக் கொள்ளற்க. அவர் இடச்சு ஆங்கிலம் இரண்டையும் செம்மையாகப் பேசுவர். தமிழகத்தில் பலர் தமிழ் வழிக் கல்வி கற்றால் ஆங்கிலம் வராதெனக் கொள்கின்றனர். இருமொழி கற்று இரண்டிலும் புலமை பெறலாம் என்பதற்கு நெதர்லாந்து ஓரெடுத்துக்காட்டு. நம் கல்வி முறைக் குறைகளை தமிழ் மொழி மேல் பழியேற்றற்க.

வரலாற்றுச் சிறப்பு

ஆம்சடர்டாம் வரலாற்றுச் சிறப்புடை இடங்களில் எல்லாம் அருங்காட்சியகங்கள் அமைத்து அதன் மரபுவழிச்செல்வத்தைத் தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. நம் நாட்டில் பல வரலாற்றுச் சிறப்புடை இடங்களில் வெறும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் எனப் பலகை மட்டும் தான் இருக்கும்; பல இடங்களில் அதுக் கூட இருக்காது. நெதர்லாந்து அருங்காட்சியகங்கள் அதன் வரலாற்றுப் பெருமையைப் பேணிக் காக்கின்றன. வேண்டுமெனின் நூலகத்திலமர்ந்து நூல் கற்பது போல் அருங்காட்சியகங்களிலமர்ந்து தொல்லியல் பொருட்களை வரலாறாய்வு கூடச் செய்யலாம். நம் நாட்டு அருங்காட்சியகங்களில் அடுத்தது அடுத்ததென மக்கள் கூட்டத்தை விரைவாகத் துறத்துவது தான் வழக்கம்; ஒரே இடத்தில் மிக்க நேரம் நின்றால் திருடனைப் பார்ப்பது போல் பார்ப்பர்.

நெதர்லாந்து அரசு பழைய அருங்காட்சியகங்களைக் காப்பதோடு தொடர்ந்து தொல்லியல் ஆய்வு செய்து புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கிறது. மேலும் எங்கேயாவது தொல்பொருள் கிடைத்தால் அது தொலைந்துவிடாமலிருக்க அதை ஏலத்திலாவது வாங்கி அதன் காப்புக்குள் கொண்டுவருகிறது. ஒரு மக்களின் தன்மானத்திற்கு அவர் வரலாற்றின் பங்கை உணர்ந்து அவர் அரசு இவ்வாறு பாடுபட்டு உழைக்கின்றது. நெதர்லாந்தின் வரலாற்றை விட நம் வரலாறு மிகத் தொன்மையானது. நாம் முறையே அகழ்வாய்ந்தோமெனின் என்ன அருமைகளையெல்லாம் கண்டறிவோமோ! அதையெல்லாம் விட்டுவிட்டு நம் அரசோ தற்பெருமைக்கும் தற்கொள்கைப் பரப்பலுக்கும் வல்லபாய் பட்டேலுக்குச் சிலையமைத்து ஒற்றுமையைப் பொய் வழிபாடுச் செய்கிறது.

உணவு

இந்தியாவில் சாதியத்தினால் எங்கும் சைவ உணவு மிகப் பரவலாகக் கிடைக்கும். நாம் எல்லோரும் சைவ உணவு மட்டும் தான் கொள்வதைப் போன்ற தோற்றம் நிலவும். சில வட்டாரங்களில் ஊன் தின்பதைப் பெருங்குற்றமாகக் கூட கருதுவர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் எளிதில் ஊன் தவிர்க்க இயலாது. எல்லா உணவிலும் ஏதோ ஒரு வகையில் ஊன் சேர்ந்திருக்கும். ஆடோ மாடோ எவ்வகை ஊனாயினும் பாகுபாடின்றி விரும்பி உண்ணும் எனக்கோ இது பேரின்பம்; இந்திய சைவர்கள் ஐரோப்பாவிற்குச் சென்றால் அவர் துன்புத்தை எண்ணி ஒருக் கிலுகிலுப்பு கூட.

நெதர்லாந்து உணவகங்களில் உணவு விலை மிகையானது. முதல் நாள் பர்கர் ஒன்றை €17 கொடுத்து வாங்கினேன். அது ஏறக்குறைய ௹1400! அவ்வளவு கொடுத்ததனாலோ என்னவோ பர்கர் நன்றாக நாவுக்குச் சுவையாக இருந்தது! :-P

தட்டொன்றில் மாட்டூன், குழைமா, பாதி அவித்த முட்டையுடன் சில மூலிகை வகைகளும்

Figure 4: வாகமாமா, ஆம்சடர்டாம் சென்றிராலில் மாட்டூன்

செல்பேசி எண்ணும் இணைய இணைப்பும்

நான் ஐரோப்பாவில் இருந்த ஏழ் நாளும் செல்பேசி சேவை இன்றி தான் சுற்றித் திரிந்தேன். செல்பேசி இல்லாமல் அதுவரை முன்னர் பின்னர் காணாத பீயரையும் எல்லாவையும் கூட சரியான இடமும் நேரமும் குறித்துச் சந்தித்தேன். தொடருந்து நிலையங்கள், வானூர்தி நிலையங்கள், உணவகங்கள், நான் தங்கியிருந்த விடுதியென எல்லாப் பொது இடங்களிலும் WiFi மூலம் இணையத் தொடர்பிருந்தது. ஊர் விட்டு ஊர் செல்லும் தொடருந்தில் கூட WiFi இருந்தது. இந்த WiFi மெய்யாகவே இலவசமான WiFi. பெங்களூர் வானூர்தி நிலையத்திலும் நம் நாட்டில் பிற இடங்களிலும் WiFi அணுக செல்பேசி எண் கொடுத்து ஒரு வேளை கடவுச்சொல் (OTP) வாங்கினால் தான் விடுவர். இலவச WiFi தருகிறேன் என்னும் பெயரில் மக்கள் இணையப் பயன்பாட்டைக் கண்காணித்து அவர் அகவுரிமையைச் சூறையாடுவது நம் நாட்டில் வழக்கம்.6

இக்காலத்தில் இந்தியாவில் கடைகளிலெல்லாம் செல்பேசி எண் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். நெதர்லாந்திலோ ஒருவர் கூட என்னைச் செல்பேசி எண் கேட்டுத் தொல்லை செய்யவில்லை.7

நான் முன்பே கூறியது போல் எல்லா இடங்களில் தகவல் பலகைகள் இருந்ததால் நிலவரைபடம் பெரிதாகத் தேவைப்படவில்லை. தேவைப்பட்டின் OsmAnd மூலம் OpenStreetMap பயன்படுத்தினேன். இணைப்பில்லாப்போதும் முழுமையாகப் பணியாற்றுவது அதன் சிறப்புகளுளொன்று.

கருப்பருடன் பேச்சு

பொது இடங்களில் நிற்கும் போது என்னிடம் கருப்பர் பலர் வந்து வழி கேட்டதை நான் கவனித்தேன். முதல் நாள் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியதும் முதல் முறை அத்தனை வெள்ளைக்காரர் இடையில் ஒரே ஒரு பழுப்பு நிறத்தவனாக நின்ற போது நான் பதற்றமடைந்தது நினைவுக்கு வந்தது. எங்கேயாவது ஒரு கருப்பன் தென்பட்டால் அவனும் நம்மைப் போல் என இனம் புரியாத ஓரன்பு. என்ன தான் முற்போக்குச் சிந்தையோடிருப்பினும் ஏதோ ஒரு வகையில் தோல்நிறத்தையும் வெளித்தோற்றத்தையும் கொண்டு நாம் மக்களை வேறுபடுத்துகிறோமென்று நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

நண்பர்த்துணை

நெதர்லாந்தில் அரிய பெரிய காட்சிகளைப் பார்த்தேன். உயர் பண்பாட்டையும் நாகரிகத்தின் உச்சத்தையும் பார்த்தேன். ஆனால் என்னதானெனினும் அங்கிருக்கையில் நாள் போகப் போக ஓர் தனிமையை உணர்ந்தேன். எங்கிருந்தாலும் பேசுவதற்கு நண்பர்த்துணையின்றி வாழ்வை முழுமையாக வாழ இயலாது. அவ்வகையில் என் பயணத்திலேயே நான் மிகவும் துய்த்து மகிழ்ந்தது காற்றாலைகளும் கால்வாய்களும் அல்ல; தண்டூர்திகளும் தொடரூர்திகளும் அல்ல; பீயரையும் எல்லாவையும் சந்தித்து உரையாடினதே! இன்னமும் அவ்வுரையாடல் மின்னஞ்சலில் அவ்வப்போது தொடர்வதுண்டு. Guix மடலாற்குழுகளில் எங்கள் பேச்சும் மாறியுள்ளது. முகம் தெரியாதவரைக் கண்டிடாதிருத்தல் எளிது. ஒருவரை நேரில் பார்த்துப் பேசிய பின்பு கண்டிடாதிருத்தல் எளிதல்ல. இதற்காகவே கட்டற்ற மென்பொருள் நண்பர்களை மாநாடுகளுக்குச் சென்று சந்திக்க வேண்டும் போல!

திரும்பியப் போது

இத்தனை நாள் தூய்மையான நகர்ப்புறங்களையும் ஒழுக்கமான மக்கள் கூட்டங்களையும் கண்டு வியந்த நான் பெங்களூருக்குத் திரும்ப பிராங்க்ஃபுர்டில் இடைவழி வானூர்தி ஏற நின்றேன். இது இந்தியாவுக்குச் செல்லும் வானூர்தி என்பதால் ஏறும் இடத்தில் மிக்கார் இந்தியராகவே இருந்தனர். அங்கு ஒரே வாயிலுக்குள் செல்ல இரண்டு வரிசை அமைத்தனர் நம் மக்கள்! இத்தனை நாள் ஒழுக்கமான மக்கள் கூட்டங்களைப் பார்த்துப் பழகிய எனக்குத் திடீரென்று வீடு திரும்பினது போல் மனக்குளிர்ச்சி உண்டாகியது. நம் மக்கள் எங்கிருந்தாலும் கூட்டம் கூடிவிட்டார்கள் என்றால் சட்டத்திட்டங்களைப் பந்தாடும் அவர் இயல்பு வெளிப்படும் போலும். ஐயோ, ஐயோ, என்னச் சொல்ல!

சிலப் படங்கள்

A pair of power sockets one on top of the other

Figure 5: ஆம்சடர்டாமில் மின் பொருத்தி. இதற்கு நிலைமாற்றி (switch) இல்லாதது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவில் இது வழக்கமோ என்னமோ.

அழகான வரிசைகளில் அமைக்கப்பட்ட பல வண்ணத் தோட்டம்

Figure 6: ஆம்சடர்டாம் ஆர்டிசு அரச விலங்கிய பூங்காவில் அழகான பல வண்ணத் தோட்டம்

கால்வாயும் படகுகளும் தொலைவில், சில பொன்னிறப் புல் முன்புலத்தில்

Figure 7: ஆம்சடர்டாம் ஆர்டிசு அரச விலங்கியல் பூங்காவிலிருந்து கால்வாய்க் காட்சி

Footnotes:

1

மின் பேருந்துகளுக்குப் பதிலாக ஏன் தண்டூர்திகள் பயன்படுத்துகிறார் என எனக்கு முதல் புரியவில்லை. பின்பு இந்த Low Tech Magazine கட்டுரை படித்துதான் விளங்கியது தண்டூர்திகளுக்கு மின்கலம் தேவையில்லையென்று. மின்கலம் தேவையில்லையென்றால் மின் வண்டிகளின் குறைகளெல்லாம் ஓய்ந்துவிடுமே! இதுப் புரியாமல் Tesla போன்ற நிறுவனங்கள் என்ன செய்கிறாரோ…

2

மாற்றம்: இதுக் குறிப்பாக இடச்சு மக்களுக்கு உரித்தான பழக்கம், பொதுவாக மேற்கத்தியவர்க்கு அவ்வளவாக கிடையாதென எல்லா கூறுகிறார்.

3

மாற்றம்: வேலைக்காரரைக் கண்டுக்கொள்ளாதல் ஐரோப்பாவிலும் உள்ளதென பீயர் சொல்கிறார். மேலும் வகுப்பு வாரியான பிரிவினை அங்குண்டென்றும் சொல்கிறார்.

4

ஆனால் எனது நண்பர் (பெரும்பாலோர் இடைநிலை வகுப்பைச் சார்ந்த மேல் சாதியினர்) ஐரோப்பாவிற்குச் செல்லும் போது அவர்க்கு அத்தகைய திடீர் புலப்பாடு ஏற்படாதது குறிப்பிடத்தக்கது. என் மனத்தில் ஏற்கனவே இருப்பது என் கண்ணுக்குத் தெரிகிறதோ என்னவோ.

5

மாற்றம்: இப்பழக்கம் உள்ளதென பீயர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும், குறிப்பாக உணவகம் போன்ற இடங்களில், அவ்வாறில்லை என்கிறார்.

6

மாற்றம்: எல்லாத் தொடருந்துகளிலும் இலவச WiFi இல்லை என எல்லா கூறுகிறார். மேலும் பயனர் அகவுரிமையைச் சூறையாடுவது அங்கும் வழக்கம் என்கிறார். ஆனால் என்னதானெனினும் நம்மை விட அவர் நல்ல நிலையில் இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். இந்தியாவில் செல்பேசி இணைப்பில்லாமல் பிழைப்பது கடினம்.

7

மாற்றம்: செல்பேசி எண் கேட்கும் பழக்கம் ஐரோப்பாவிலும் பரவலாக இருப்பதாக பீயர் கூறுகிறார். நான் தான் எப்படியோ அதைக் காணாதுத் தப்பினேன் போல.