திருச்சியில் FSFTN முகாம்

திருச்சியில் FSFTN முகாம்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: கட்டற்ற_மென்பொருள், fsftn, திருச்சி

செப்டம்பர் 30 யிலிருந்து அக்டோபர் 2 வரை கட்டற்ற மென்பொருள் இயக்கம் தமிழ் நாடு திருச்சியில் நடத்திய முகாமுக்குச் சென்றிருந்தேன். அதைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை.

சென்ற வாரயிறுதியில் (அக்டோபர் 1 & 2) கட்டற்ற மென்பொருள் இயக்கம் தமிழ் நாடு (Free Software Foundation Tamil Nadu – FSFTN) திருச்சியில் நடத்திய முகாமுக்குச் சென்றிருந்தேன். பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் கட்டற்ற மென்பொருளை நான் பயன்படுத்தியிருந்தாலும் கட்டற்ற மென்பொருள் சமுதாயத்துடன் பெரிய அளவில் அளவளாவியதில்லை. கட்டற்ற மென்பொருள் நிரலாளர்களுக்கும் கணினி வல்லுநர்க்ளுக்கும் மட்டுமே என்னும் தவறான கருத்தை இம்முகாம் சிதைத்தது. கட்டற்ற மென்பொருள் இயக்கத்தில் எளிய பொதுமக்களாலும் பங்குக்கொள்ளலாம், அரிய கணினி புலமை தேவையில்லை என்னும் கருத்தை நன்றாக எடுத்துரைத்தது.

அந்தரங்கம் பற்றின விழிப்புணர்வு

கதிரவனால் ஒளியூட்டப்பட்ட வெளிச்சமான அறையொன்றில் சுமார் 20 பேருடைய கூட்டத்திடம் நான் பேசுகிறேன்

Figure 1: திருச்சியில் நடந்த FSFTN முகாம் 2016 யில் அந்தரங்கம் பற்றின உரையாடல்

முகாமின் இறுதி நாளன்று அந்தரங்கம் (privacy) பற்றின செயல்சார் உரையாடல் ஒன்றை நடத்தினோம். இச்சமூக சூழலில் அந்தரங்கம் எளிதில் புலனாகும் கருத்தல்ல. தப்பு செய்தால் தான் அதை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இருப்பினும் அதன் முக்கியத்துவத்தை நம் உள்ளுணர்வில் அறிவோம். இந்த உள்ளுணர்வை வெளிகொண்டு வர பின்வரும் இரண்டு வழியாக முயன்றோம்.

  • இலவசமாக வாடகை எதுவிம் இல்லாமல் வீடு தருவதாகக் கூறினோம் 1. இதற்கு பலர் ஆர்வமாக இருந்தனர். பின்னர் அவர்கள் பாதுக்காப்பிற்காக குளியலறை உட்பட அனைத்து அறைகளிலும் படமிகள் (camera) பொருத்தப்பட்டிருக்கும் என்றோம். உடனே அனைவரும் அவ்வீட்டில் ஆர்வமிழந்தனர்.
  • முகாம் பங்கேற்போர் இருவரை மேடையில் வரவழைத்து மற்றவர் கைபேசியை வாங்கி அவரது WhatsApp செய்திகளை படிக்க வைத்தோம். அவர்கள் அந்தரங்க வாழ்க்கையில் ஊடுருவி அவர்களைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக இவ்விருவரிடம் முன்பே பேசி வைத்து அவர்கள் சொந்த WhatsApp செய்திகளில்லாமல் மேடையில் படிப்பதற்குப் போலி செய்திகளைக் கொடுத்திருந்தோம். இவ்வாறு அவர்கள் படித்தப் பின்னர் வேறு எவராது தங்கள் WhatsApp செய்திகளைப் பிறரிடம் கொடுத்து மேடையில் படிக்க முன்வருகிறார்களா என்று கேட்டோம். எவரும் வரவில்லை. அனைவரும் அமைதியாகவே இருந்தனர்.

நான் எதிர்பார்த்ததைவிட இச்சிறிய நாடகத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இத்தாக்கத்தைக் கொண்டு இணையத்திலுள்ள (குறிப்பாக WhatsApp-யிலும் Facebook-யிலும்) அந்தரங்க பிரச்சனைகளைப் பற்றி விளக்கினோம்.

அந்தரங்கயுரிமை சார்ந்த பிரச்சனைகள் பற்றிய என் விழிப்புணர்வு பல ஆண்டுகாலமாகப் பொறுமையாக வளர்ந்தது. அதைப் பற்றி இது வரை சிந்தித்திராத மக்களிடம் அரை மணிநேரத்தில் புரிய வைப்பது எளிதல்ல. எனினும் இது ஓரளவுக்குச் சாத்தியமானதென்றால் அதற்கு முகாமில் பங்கேற்ற பிற நண்பர்களின் பங்களிப்பும் அவர்களிடம் கொண்ட தொடர்ந்த கருத்து பரிமாற்றமுமே காரணம். உதாரணத்திற்கு, மேடையில் படித்தப் போலி WhatsApp செய்திகள் இயல்பான பேச்சு வழக்காக இருப்பதற்கு, உள்ளூர் பண்பாட்டை நன்கு அறிந்த விக்னேஷ் மற்றும் பிறரே கலந்துரையாடி அதனை எழுதினர். அச்செய்திகளை நானே எழுதியிருந்தால் அது மக்களிடம் போய் சென்றடைந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

கூட்டுடைமை கணினி வலையமைப்புகள், OpenStreetMap, பாலின பாகுபாடு மற்றும் பிற

மேலும், இணையத்திலேயே தொடர்பு கொண்ட பல நண்பர்களை முகாமில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கணேஷுடனும் சூரியதீபனுடனும் கூட்டுடைமை கணினி வலையமைப்புகள் (community mesh networks) பற்றி உரையாடினேன். அவர்கள் புதுச்சேரியில் அவ்வலையமைப்புகளை அமைக்க முயன்று வருகின்றனர். அம்முயற்சியிலுள்ள புதிய வளர்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். OpenStreetMap உரையிலிருந்து அதன் கட்டற்ற தரவை Google Maps அளிக்கும் வழியிடல் சேவைக்கு அப்பால் வேறு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று சில கருத்துக்களைப் பெற்றேன். மேலும், சமுதாயத்திலுள்ள பாலின பாகுபாடு பற்றியும் கலந்துரையாடினோம். கல்லூரி மாணவர் விடுதிகளிலும் தங்கள் வீடுகளிலும் பெண்கள் மீது திணிக்கப்படுகின்ற கொடிய தடைகளைப் பற்றி பேசினோம். முகாமில் Python மற்றும் Blender பயிலரங்கங்கள் நடைபெற்றன. அவை நெகிழ்விலா பாடத்திட்டங்களுடன் இல்லாமல் பங்கேற்போர் கற்றுக்கொள்ளும் வேகத்திற்கு ஏற்றவாறு பொறுமையாகச் சென்றன.

நட்புறவும் சகோதரத்துவமும்

இந்த முகாம் சிறு வயதில் நான் கலந்து கொண்ட கிறிஸ்தவ முகாம்களும் அங்கிருந்த நட்புறவையும் எனக்கு நினைவூட்டியது. கடவுள் இல்லை என்று நான் நினைத்தாலும், சமயம் சார்ந்த விஷயங்களில் எனக்கு ஈடுபாடில்லாவிட்டாலும், சமயக்குழுமங்களில் பரவலாக இருக்கும் சகோதரத்துவத்தையும் சமூக ஒற்றுமையும் பகுத்தறிவு சார்ந்த இயக்கங்களின் நாம் அனேக நேரம் மறந்துவிடுகின்றோம் என்று நான் நினைக்கின்றேன். "நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா" என்ற போட்டி மனப்பான்மை இல்லாமல் நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வருவது எப்படி என்ற உணர்ச்சி இம்முகாமில் எனக்குத் தெரிந்தது.

இறுதியாக, சனிக்கிழமை காலை என்னைத் திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்த ரவிக்கும் இம்முகாம் நடைபெற தீராது உழைத்த ராமஷேஷனுக்கும் பிற அன்பர்களுக்கும் எனது நன்றி. முகாமில் சாப்பாடு அருமையாக இருந்தது. தங்குவதற்கு இடமும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இன்னும் இது போன்ற முகாம்களிலும் பிற கட்டற்ற மென்பொருள் சார்ந்த செயல்முனைப்புகளிலும் பங்கு பெற நான் ஆவலாக உள்ளேன்.

Footnotes:

1

இது ராமஷேஷன் அவரது வலைப்பதிவில் முதலில் http://blog.voidspace.xyz/upar-wala-shab-dek-raha-hai.html எடுத்துக்கூறிய வாதக்கருவி.